திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.94 திருவாழ்கொளிபுத்தூர் பண் - பியந்தைக்காந்தாரம் |
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
1 |
எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
கண்ணு மாயிரம் உடையார் கையுமொ ராயிரம் உடையார்
பெண்ணு மாயிரம் உடையார் பெருமையொ ராயிரம் உடையார்
வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
2 |
நொடியோ ராயிரம் உடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்
வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
3 |
பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
4 |
பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
5 |
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
6 |
மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
7 |
ஏழும் மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
8 |
வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
9 |
மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.
|
10 |
நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |